நவரசா என்ற திரைப்படத்தில் தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய பாயசம் என்ற சிறுகதை சித்தரிக்கப் பட்டிருந்தது. அந்த கதை மிகவும் பிடித்துப் போக அவரின் வேறு கதைகளை படிக்க வேண்டும் என்ற அவா எழுந்தது, அதனின் தொடர்ச்சியாக செம்பருத்தி படிக்கலானேன்.

கதை சுருக்கம்: சட்டநாதன் என்பவரின் வாழ்க்கை வரலாறு மூன்று காலக் கட்டங்களில் – அவரது இளமை பருவம், middle-age எனப்படும் நடுத்தர வயது, மற்றும் அவரது முதுமை காலத்தில் அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், மற்றும் அவர் சந்திக்கும் சவால்கள்.

இந்த கதையை கிட்ட தட்ட 500 பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார். கதையின் ஓட்டம் முழுவதும் சட்டநாதனின் பார்வையிலேயே நகர்கிறது. Family -drama என்றாலும் அலுப்புத் தட்டாமல் 500 பக்கங்கள் எழுதியதே அவரது முதல் வெற்றி.

நான் பெரும்பாலும் தமிழில் சரித்திர புதினங்கள் மட்டுமே படித்திருந்தேன் . என்னால் இப்படி ஒரு குடும்ப கதையை இவ்வளவு சுவாரசியமாக படிக்க முடிந்ததே வியப்பாக இருந்தது. அதற்கு காரணம், ஜானகிராமனின் இயல்பான  கதை சொல்லும் திறன். காதல், காமம், துக்கம், சந்தோஷம், விரக்தி, ஆன்மீகம் என்று எல்லா அம்சங்களும் அளவாக கலந்திருந்தது. படிக்கப் படிக்க ஆசையாக இருந்ததே தவிர, எந்த ஒரு இடத்திலும் ஒரு வெறுப்போ, திகைப்போ , ஏமாற்றமோ இல்லை.

கதை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முன்னாள் நடந்தது போல அமைத்தமையால், சில சுவாரசியமான சரித்திர சம்பவங்களையும் கதையில் சேர்த்திருந்தார். அந்த காலத்தில் மக்கள் வாழ்த்த வீடு, வாழ்க்கை முறை, வேலை என்று பல பரிணாமங்களில் கதையை எடுத்துச் சென்றிருந்தார். அந்த காட்சிகள் அப்படியே கண்முன் வந்து சென்றது.

ஆண் என்றால் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம், அனால் ஒரு பெண் என்றால் ஒருவனை தவிர வேறு ஒருவனை மனதில் கூட நினைக்கக்  கூடாது என்பது போல பல எழுத்தாளர்கள் அந்த காலத்தில் எழுதியதுண்டு. இக்கதை 1968 ல் பிரசுரமானாலும் , சிந்தனை முற்போக்காக இருந்தது. ஜானகிராமன் இக்கதையில் stereotype என்று சொல்லப்படும் கருத்துக்களையோ, கதாப்பாத்திரங்களையோ அடியோடு ஒழித்திருந்தார். விதவையான சின்ன அண்ணி சட்டநாதனின் மீது வைத்திருந்த ஆசை , சட்டநாதனின் மனைவி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை இவை இரண்டு தான் இக்கதையின் ஆணிவேர். எத்தனை உறவுகள், எத்தனை உணர்ச்சிகள், எவ்வளவு கலப்படமில்லா சிந்தனை… ஜானகிராமனின் எழுத்து திறமைக்கு நான் ரசிகை என்றே கூற வேண்டும்.

ஒவ்வொரு சமயம் என் குடும்பத்தில் ஏற்படும் சிரமங்களை சந்திக்கும் பொழுது கூட, சட்டநாதனின் மனைவி புவனாவைப் போல எனக்கு பொறுமையைக் கொடு என்று இறைவனிடம் வேண்டும் அளவிற்கு இக்கதை என்னுள் ஆழப்  பதிந்து விட்டது.

ஒரு சின்ன ஏமாற்றம் தான் கதையை படிக்கும் போது வருகிறது  , சட்டநாதனின் பார்வையிலேயே கதை நகருவதால், புவனா, மற்றும் சின்ன அண்ணி குஞ்சம்மாவின் எண்ண அலைகளை பற்றி அறிய முடியவில்லை. அவர்கள் அந்த அடுக்களையில் என்ன தான்  பேசிக் கொண்டிருப்பார்கள்? எவ்வளவு பெரிய குடும்பம், எத்தனை வேலைகள், எத்தனை  குழந்தைகள்…… அவர்கள் எப்படி இவ்வளவு வேலைகளை சமாளித்தார்கள் என்று கற்பனை செய்யும்போதே பிரமிப்பாக உள்ளது. அவர்களின் தோழியாக செம்பருத்தி கதையில் இடம் பெற மனம் ஏங்குகிறது.