Stories that inspire

சதுர்த்தி வந்தது சந்தோஷம் பிறந்தது

விநாயக சதுர்த்தி என்றாலே மனதில் தோன்றுவது கொழுக்கட்டை . அடடா! வெள்ளை கொழுக்கட்டை, அம்மனி கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, தேங்காய் பூரணம், பருப்பு பூரணம், கோதுமை மாவில் பொறித்து எடுத்த மோதகம்… எத்தனை வகைகள், நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதே …

என்னடா இவள் கொழுக்கட்டையை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாளே, சரியான சாப்பாட்டுராமி போல என்று உங்களுக்கு நினைக்கத் தோணலாம், ஆனால் என்ன செய்ய, யானை முகனை நினைக்கையில் கொழுக்கட்டையும் சேர்ந்தே நினைவில் வருகிறது.

சதுர்த்தி அன்று வெளிவந்த ஆன்மீக மலரை வாசித்தேன், என்ன இது நாம் எழுத ஒன்றுமே மிச்சம் வைக்காமல் விநாயகர் மற்றும் சதுர்த்தி பற்றி சகலமும் இந்த இதழில் உள்ளதே என்று ஒரு சின்ன கலக்கம் ஏற்பட்டது. ஆனால் படிக்கப் படிக்க சலிக்காதது விநாயகர் கதைகள் மற்றும் சிறப்புகள் என்று எண்ணி எழுதலானேன்.

விநாயகரின் சிறப்புகள்

அழகான யானை முகத்துடன், புஷ்டியான கைகள், கால்கள், தொந்தி, கனிந்த அன்பான வதனம், கையில் கொழுக்கட்டை, வாகனமாக மூஞ்சூர், என்று பார்த்தவுடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து விடுவார். விநாயகரை மட்டுமே அனைத்து ஹிந்துக்களும் பேதமில்லாமல் போற்றுகிறார்கள், அதற்கு காரணம் அவரது எளிமை. அவர் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. அனைத்து பூஜைகளிலும் முதல் பூஜை விநாயகருக்கே, ஆனால் அவர் தனக்கென்று பெரிதாக கோபுரம் கட்ட வேண்டும் என்று  நினைக்கவில்லை. சின்னதாக ஒரு சந்நிதி வைத்துவிட்டால் கூட போதும் . இவ்வளவு ஏன், பெரும்பாலான இடங்களில் அரசமரத்தடியில் இருந்தே நமக்கு ஆசி வழங்குகிறார்.

பிள்ளையார் என்றும் அழைக்கப்படும் இந்த பிள்ளை சாமி ஏழை எளியவர்களுக்கெல்லாம் கடவுள். நினைத்த மாத்திரத்தில், ஒருவர் களிமண்ணிலோ, மஞ்சள்பொடியிலோ, சாணியிலோ கூட பிள்ளையார் பிடித்து பூஜை செய்து விடலாம். அவருக்கு பூஜை செய்ய வாசனைப்பூக்கள் தேவையில்லை,  எங்கும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய அருகம்புல், எருக்கம்பூ, இலைகள், மற்றும் தும்பைப்பூ போதும்.

பிள்ளையார் வழிபாடும் யோகசாஸ்திரமும்

பிள்ளையார் சந்நிதியில், இரண்டு கைகளையும் மறித்து நெற்றிப்  பொட்டில் குட்டிக்கொள்ள வேண்டும். இப்படியே இரண்டு கைகளையும் மறித்துக் காதுகளைப்  பிடித்துக் கொண்டு, முட்டிக்கால் தரையில் படுகிற மாதிரி தோப்புக் கரணம் போடவேண்டும். இவை எதற்கு என்றால், யோகசாஸ்திரம்  வழியாக நமது நாடிகளில் ஏற்படும் சலனங்களால் எப்படி மனதையும் நல்லதாக மாற்றும் வழியை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் இந்த தோப்புக் கரணத்தை மனதில் நம்பிக்கையுடன் செய்தால் நமது மனம் சலனங்கள் இன்றி தெளிவு பெறும். நம்முடைய ஞாபக சக்தி பெருகும்.

தமிழ்நாடும் பிள்ளையாரும்

இந்த தமிழ்நாட்டில் மட்டும் பார்க்கும் சிறப்பு என்னவென்றால், சந்து பொந்து , மரத்தடி, ஆற்றங்கரை என்று எங்கு பார்த்தாலும் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருப்பார் . பெரிய நகரம் முதல் சிறிய கிராமம் வரை, எங்கும் நிறைந்திருப்பவர் விநாயகரே. இப்பொழுதெல்லாம், பல வீடுகளில் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் கூட ஒரு பிள்ளையார் சந்நிதி வைத்து விடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டை விட்டு கொஞ்சம் தாண்டிப் போனால் கூட இப்படிப் பார்க்க இயலாது.

அனைத்து நம்பிக்கைகளிலும் பிள்ளையார் வழிபாடு உண்டு

பிள்ளையார் எல்லாருக்கும் நல்லவர்; எல்லாருக்கும் வேண்டியவர். பொதுவாக பெரிய கோவில்களில் மட்டுமே அனைத்து சந்நிதிகளைப் பார்க்கமுடியும். ஆனால், நம் பிள்ளையார் மட்டும் சிவன், அம்பாள், முருகன் என்று அனைத்து கடவுள்களின் தனி கோவில்களிலும் கூட ப்ரஸித்தமாகி இருப்பார். இவ்வளவு ஏன், பெருமாள் கோவில்களில் கூட தும்பிக்கையாழ்வாராக அருள் பாலிக்கிறார். ஹிந்து மதம் மட்டும்தானா புத்த, ஜைன மதங்களிலும் அவரை வழிபடுகின்றனர்.

திலகரும் கணேச சதுர்த்தியும்

சுதந்திர போராட்டம் இந்தியாவில் களைகட்டிய காலம் அது. மக்கள் திரள் திரளாக எங்கும் கூடி ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். இதனால் பயந்து போன அவர்கள், மக்கள் காரணமில்லாமல் பொது இடங்களில் கூடுவதற்கோ, பேசுவதற்கோ தடை விதித்தனர். தகவல் தொழில்நுட்பம் பெரிதும் வளராத காலம் என்பதால், கட்டுப்பாடுகளுக்கு இணங்கி இந்திய மக்கள் வீட்டிலேயே முடங்கிப் போனர். பால கங்காதர திலகர்  இந்த நிலையை மாற்ற நினைத்தார். இந்திய மக்களை ஏதாவது ஒரு பொது விஷயத்திற்காக வீட்டிலிருந்து வெளிக் கொண்டுவர நினைத்தார். அதற்கு அவர் எடுத்த ஆயுதமே கணேசர். வட மாநிலங்களில் பெரும்பாலும் கணேசர் என்றே    அழைக்கப்படுவார் நம் ஆனைமுகத்தான் .

திலகர் 1893 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் கணேச சதுர்த்தி உற்சவத்தை நிறுவினார். பத்து நாட்கள் விமரிசையாக மக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையாக சதுர்த்தியை மாற்றினார். பெரிய, பெரிய விநாயகர் சிலைகளை தெரு தோறும் வைத்து வழிபடும் வழக்கத்தைக் கொண்டுவந்தார். இதன் காரணமாக மக்கள் உற்சாகத்தில் திரளாக கூடினர். சுயாட்சி பற்றிய விழிப்புணர்வையும் இந்த உற்சவத்தின் மூலம் மக்களிடம் சேர்த்தார். திலகராலேயே இன்று இந்தியா முழுவதும் பல வண்ணங்களில், பல வடிவங்களில், சிறிதும் பெரிதுமாக மக்கள் தெரு தோறும் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுகிறார்கள். ஒரு நாள் பண்டிகையாக இல்லாமல் ஒரு உற்சவமாக, பிள்ளையாரை கடலில் கரைக்கும் வரை கேளிக்கையுடன் மக்கள் கொண்டாடத் துவங்கினர் 

சிறுவயதில் சதுர்த்தி கொண்டாடிய நினைவுகள்

kozhukkattai

சதுர்த்தி அன்று காலை நான் மண் பிள்ளையார், குடை மற்றும் தோரணம் வாங்க அப்பாவுடன் கடைத் தெருவிற்கு புறப்பட்டு விடுவேன். பண்டிகை என்றால் குளித்து தான் கடவுளை தொடவேண்டும் என்ற கணக்கு பிள்ளையாருக்கு கிடையாது போலும். அம்மா கூட அன்று பிள்ளையாரை தொட்டால் திட்டமாட்டாள். மண் பிள்ளையார் மற்றும் குடையை   பூஜையறையில் வைத்துவிட்டு, பூக்கள் பறிக்க சென்றுவிடுவேன். அப்போது எங்கள் தெருவில் பெரும்பாலும் தனி வீடுகள் தான். செம்பருத்தி, தும்பை, அரளி, பாரிஜாதம், அருகம்புல், என்று சகலமும் இருக்கும் எங்கள் தெருவில். குழந்தைகள் பூ பறித்தால் எதுவும் திட்ட மாட்டார்கள் அக்கம் பக்கத்தினர். இதில் குண்டாக மஞ்சள் நிறத்தில் ஒரு பூ உண்டு, எனது பாட்டி அதை  கொழுக்கட்டை பூ என்றே கூறுவாள். அந்த பூவை நிறைய பறித்து போடுவேன் பிள்ளையாருக்கு.

பிறகு குளித்து பாவாடை உடுத்தி, தாத்தாவுடன் பூஜையில் அமர்ந்து நான் பறித்த பூவை வைத்து அர்ச்சனை செய்வேன் . மிகவும் ஆனந்தமாக இருக்கும்.பூஜை முடிந்ததும் நிவேதனம் நடக்கும். அம்மா செய்த பலகாரங்களை ஒரு பிடி பிடிப்பேன். அப்புறம் அம்மனி கொழுக்கட்டை உருட்டுவேன், யார் நிறைய உருட்டுகிறார்களோ அவர்களுக்கு நிறைய தருவேன் என்பாள் அம்மா. எத்தனை போட்டி.. எத்தனை வேகம்… இன்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அம்மா சதுர்த்தியன்று  மட்டும் அத்தனை முறை கொழுக்கட்டை வேகவிடுவாள்.

மாலையில் அப்பாவுடன் அவரது மொபெட்டில் பிள்ளையார் பார்க்க சவாரி சென்றுவிடுவேன். தெருதோறும் பிள்ளையாரை எண்ணிக்கொண்டே செல்வேன். மறுநாள் பள்ளிக்கு வேனில் செல்லும்போதும் எண்ணுவேன். 108 எண்ணுவது தான் கணக்கு. என்ன கணக்கோ தெரியாது… ஆனால் அதற்குமேல் நிறுத்திவிடுவேன். பூஜையில் வைத்த அந்த மண் பிள்ளையாரை கொண்டு கடலில் கரைக்கும் வரை அப்பாவுடன் சென்று எங்கள் பிள்ளையாரை வழியனுப்புவேன் .

இன்று இரண்டு குழந்தைகளுக்கு தாயாக சதுர்த்தி கொண்டாடுவதிலும் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. என் மழலைகள் மனதிலும் சதுர்த்தியை பற்றிக் கூறி அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் குழந்தைகளின் கடவுள் நம் பிள்ளையாரே, எளிமையின் கடவுளும் அவரே.

« »