‘டும்,’ என தூரத்தில் சத்தம் கேட்க, பதறி எழுந்தாள் குழந்தை லலிதா. தீபாவளியன்று அனைவரும் எழுந்து பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விட்டனர், தான் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்று கலக்கத்துடன் அவள் கண் விழிக்க, வீட்டில் சுற்றி இருள் சூழ்ந்திருந்தது.
கண்கள் சற்றே இரவொளிக்கு சுதாரித்தவுடன், மெல்ல எழுந்து கீழே படுத்திருப்பவர் யாரையும் மிதிக்காமல் தத்தி, தத்தி நடந்து சமையலறையின் மின்விளக்கைப் போட்டாள். அங்கே இருந்த கடிகாரத்தில் மணி இரண்டு . அடுப்பு சுத்தமாக துடைத்திருந்தது, பட்சணங்கள் செய்த எண்ணை சட்டி மட்டும் மேடையில் ஒரு ஓரமாக இருந்தது . தரையில் பல சம்படங்களில் பட்சணம் பொறித்து வைத்திருந்தாள் அம்மா. அதைச் சுற்றி சீதா தேவிக்கு லட்சுமணன் போட்ட கோட்டைப் போல எறும்பு வராமலிருக்க ஒரு வளையத்தையும் போட்டிருந்தாள்.
“அதுக்குள்ள முழிச்சின்டியா நீ?” என்று பின்னாலிருந்து பாட்டியின் குரல் கேட்டது லலிதாவிற்கு. “தூக்கமே வரல பாட்டி. நான்தான் முதல்ல எழுந்தேன், எனக்கு தான் முதல்ல எண்ணை தேச்சு விடனும் நீங்க. போன வருஷம் பிரியா முதல்ல குளிச்சிட்டு ரொம்ப பீத்திண்டா,” என்றாள் லலிதா. பாட்டி சிரித்தபடி ,”ஓ! தேச்சுவிட்டா போச்சு,” என்று கூறி ஒரு அடுப்பில் காபிக்கு வெந்நீரும், மறு அடுப்பில் இரும்பு சட்டியில் இஞ்சி, மிளகுடன் நல்லெண்ணையை சூடு செய்தாள் . பின் வரிசையாக அம்மா, அத்தை, சித்தி, தாத்தா என ஒவ்வொருவராக எழுந்திருக்க தீபாவளி களைகட்டத் துவங்கியது.
பாட்டி “கௌரி கல்யாணம்,” என்று பாடியபடி கோலம்போட்ட பலகையில் அமர்ந்திருந்த லலிதா தலையில் எண்ணை தேய்த்தாள். ” பாட்டி … நாம ஏன் தீபாவளி கொண்டாடறோம்?” ” உனக்கு தான் அந்த கதை தெரியுமே லலிதா!” என்றாள் பாட்டி.”இன்னொரு தடவ சொல்லுங்கோ பாட்டி,” என்று கெஞ்சினாள் லலிதா. “சரி! சொல்றேன் கேளு, நரகாசுரன் என்ற ராட்சசன், தேவர்களையும், மக்களையும் ரொம்ப கொடுமை படுத்தினான். இவா எல்லோரும் போய் கிருஷ்ணர் கிட்ட தங்களை காப்பாத்தும் படி வேண்டிக்கிறா. உடனே, கிருஷ்ணரும், அவருடைய மனைவி, பூமாதேவியின் அம்சமான சத்தியபாமாவும் சேர்ந்து நரகாசுரனை கொன்றனர்,” அதனால நாம அந்த நல்ல நாளை தீபாவளியா கொண்டாடறோம்.” என்றாள் பாட்டி. ” யாராவது ஒருத்தர் செத்துப்போன தினத்தை போய் கொண்டாடுவாளா?” என்று வினவினாள் லலிதா. “ஓய் … உனக்கு தெரியாதா ஏன்னு?” என்றாள் பாட்டி. ” நீங்களே சொல்லுங்கோ பாட்டி!” என்று மறுபடியும் குழைந்தாள் லலிதா. “நான் சாகர அன்னிக்கு யாரும் அழக்கூடாது, எல்லோரும் அந்த நாளை தீபங்கள் ஏற்றி, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பரிமாறிக்கொண்டு கொண்டாடணும்னு நரகாசுரன் சாகும் போது கிருஷ்ணர்கிட்ட வரம் வாங்கிண்டான்,” என்று எண்ணை தேய்த்தபடியே கதையை சொல்லி முடித்தாள் பாட்டி.
வீட்டு கூடத்தில் ஜமக்காளம் மற்றும் பாய்களில் படுத்திருந்த மற்ற உறவுகளை “தீபாவளி வந்தாச்சு! தீபாவளி வந்தாச்சு!,” என்று கத்தியபடியே, மின் விளக்குகளைப் போட்டு லலிதா குட்டி எழுப்பினாள்.
பத்து வயது லலிதா வாழ்ந்துக் கொண்டிருந்தது பன்னிரண்டு பேர் கொண்ட பெரிய கூட்டுக் குடும்பம். பண்டிகை என்பதால் ஊரிலிருந்து அவளின் இரண்டு அத்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்தனர், கேட்கவா வேண்டும் அவள் மகிழ்ச்சியை? எண்ணை வைத்துக் கொண்டு லலிதாவும் அவளது சகோதர சகோதரிகளும் பட்டாசு வைத்தனர். பிறகு, கொதிக்கும் நீரில், வேப்பிலை மற்றும் பூஜையறையில் இருந்த கங்கை சொம்பிலிருந்து வாளியில் சிறிது கங்கை நீர் ஊற்றி, அரப்பு, மஞ்சள் தேய்த்து குளிப்பாட்டி விட்டாள் அம்மா.
தீபாவளி புத்தாடை என்றால் குங்குமம் வைத்துப் போட்டுக் கொள்வது தானே முறை? அம்மா அவ்வாறு சுத்தமாக மடித்து பூஜையறையில் வைத்திருந்த புத்தாடைகளை உடுத்தி லலிதாவும், மற்ற வாண்டுகளும் கையில் ஊதுபத்தியுடன், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பட்டாசுகளை எடுத்துக் கொண்டு, அடுத்த முறை பட்டாசு வெடிக்க வாசலுக்குச் சென்றனர்.
அப்பாவும்,சித்தப்பாவும் விடாமல் திரி கிள்ளித்தர சரங்களும், வெடிகளும் வெடித்துத் தள்ளினர் அந்த குட்டிகள். இதற்கு நடுவில் “தீபாவளி வாழ்த்துகள்!” “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று அக்கம் பக்கத்தினர் வாழ்த்தினர். “அப்பா பாரு, அந்த கோபு மட்டும் கையிலே கொளுத்தி வெடி போடறான். நானும் போடனும்,” என்று அடம் பிடித்தாள் லலிதா . “அவன் பெரிய பையன், சொன்னா கேட்க மாட்டான், நீ சமத்துல? கையிலேயே வெடிச்சிட்டா கொப்பளம், கொப்பளமா வந்திடும், டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனும், தேவையா உனக்கு?” என்று கூறி சமாளித்தார் அப்பா. ஒரே அமளி துமளியாக இருந்தது அந்த காட்சிகளை பார்ப்பதற்கு.
ஒரு வழியாக காலை பட்டாசு படலம் முடிந்தவுடன், பட்சணப் படலம் துவங்கியது… மிக்சர், பூந்தி, தேங்குழல், தட்டை, லட்டு, ஜாங்கிரி, மைசூர்பா என ஒருபக்கம் வந்த மேனிக்கு இருந்தது. லலிதாவும், அவள் குடும்பத்தினரும் ஒரு பிடி பிடித்தனர். “லேகியம் சாப்பிட்டா தான் சாயந்தரம் பட்சணம் தருவேன்,” என்று கூறியபடி அனைவரின் வாயிலும் தீபாவளி மருந்தை திணித்தாள் பாட்டி.
“நமஸ்காரம் பண்ணினா இருபது ரூபாய் தருவேன்,” என்று தாத்தா கூறி தனது கருப்பு பர்ஸை எடுத்து வந்தார். உடனே அங்கு ஒரே பரபரப்பு ஏற்பட்டது. எல்லோரும் வரிசையாக வந்து தாத்தா பாட்டி கால்களில் விழுந்து ஆசி பெற்றனர். கடைக்குட்டி முகுந்தன் மட்டும் குப்பிறபடுத்த மேனிக்கு வெகுநேரம் இருந்தான். “எவ்வளவு நேரம் நமஸ்காரம் பண்ணினாலும் இருபது ரூபாய் தாண்டா,” என்று தாத்தா கூற அனைவரும் ‘கொல்’ என்று சிரித்தனர்.
இதற்குள் சமயலறையில் பட்சணப் பட்டுவாடா நடந்துக் கொண்டிருந்தது. லலிதாவின் அம்மா வீட்டுச் சிறுவர்களை அழைத்து அக்கம் பக்கத்தினருக்கு இனிப்பும், காரமும் கொடுத்து வரும்படி கூறினாள். லலிதாவிற்கு அவர்கள் தெருவிற்கு புதிதாக குடிவந்த செந்தில் மற்றும் டேவிட்டின் வீட்டிற்குச் சென்றுவர உத்தரவு . “சிடுமூஞ்சி செந்தில் மாமா வீட்டுக்கு போக முடியாது! அவர் எப்போதும் சிகரெட் பிடித்தபடி இருக்கிறார்,” என தர்க்கம் செய்தாள் லலிதா. “இதோ பாரு, பண்டிகை னா எல்லாரோட ஆத்துக்கும் போய் பட்சணம் தரணும், அது அன்பின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் வெளிப்பாடு, அன்னிக்கு போய் பிடிச்சவா பிடிக்காதவா எல்லாம் பார்க்கக் கூடாது. அடம் பிடிக்காம போய் குடுத்துட்டு வா,” என்றாள் அம்மா. முணுமுணுத்தபடியே செந்தில் மாமா வீட்டுக்கு சென்றாள் லலிதா. ஆனால், அங்கு அவளுக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
வழக்கமாக உம்முனு இருக்கும் செந்தில் மாமா கூட குளித்து, புத்தாடை உடுத்தி சிரித்த முகத்துடன் லலிதாவை வரவேற்றார். அவளிடம் வெகுநேரம் சிரித்துப் பேசினார். இனிப்புகள் மற்றும் கதை புத்தகங்கள் கூட அன்பளிப்பாக கொடுத்தார். அன்று முதல், சிடுமூஞ்சி செந்தில் மாமா, லலிதாவிற்கு மிகவும் பிடித்தமான செந்தில் மாமாவாக மாறினார். அதன் பிறகு பள்ளியில் கொடி நாள் நன்கொடை வசூலிப்பு, இயற்கை பேரிடர் சம்பந்தமான நன்கொடை வசூலிப்பு என்றால், லலிதாவிற்கு நிறைய நன்கொடை தருவது செந்தில் மாமாவாக தான் இருப்பார். டேவிட் மாமாவும் லலிதாவை அன்பாக வரவேற்றார். சாக்கலேட்டுகள் கொடுத்தார். அதன் பிறகு, ஒவ்வொரு கிறிஸ்துமஸ் -க்கும் லலிதாவின் குடும்பத்திற்கு பிளம் கேக் கொடுத்து தனது அன்பை பரிமாறிக்கொண்டார்.
மாலையில் வீட்டு மொட்டை மாடியில் குடும்பத்துடன் அனைவரும் புஸ்வானம், தரை சக்கரம், ராக்கெட், மத்தாப்பூ என வெடிக்க, மீண்டும் தீபாவளி கொண்டாட்டம் துவங்கியது. வீட்டுப் பெண்கள் புது புடவை அணிந்து பட்டாசுகளை வெடிக்க ஆயத்தமானர். வாரம் முழுவதும் சமயலறையில் அயராமல் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, பாட்டி, சித்தி, அத்தைகள் குதூகலமாக பட்டாசு வெடிக்க வந்தமையால் அந்த மழலைகள் கூட மனமுவந்து தங்கள் பட்டாசுகளை அவர்களுடன் பகிர்ந்தனர். ஏக குஷியில், தினமும் தீபாவளியாக இருந்துவிடக் கூடாதா? என்ற ஆசையுடன் அன்னாந்து பார்த்து வான வேடிக்கைகளை ரசித்தாள் லலிதா.
ட்ரிங்…ட்ரிங்… என அலாரம் அடிக்க, நன்கு விழித்த நிலையில் படுத்திருந்த லலிதா, அலைபேசியை எடுத்து ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரத்தை அனைத்தாள். ஐந்து மணிக்கு மிகவும் நிசப்தமாக இருந்தது அவள் தெரு, மருந்திற்கு கூட ஒரு வெடி சத்தத்தை அங்கு கேட்க முடியவில்லை. அருகே திரும்பிப்பார்த்தாள், இரவு வெகுநேரம் கண் விழித்து தொலைக்காட்சி பார்த்ததால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர் அவளது கணவரும், குழந்தைகளும். அவர்கள் ஏழு மணிக்கு குறைந்து எழப்போவதில்லை என்று நினைத்து, ஒரு சலிப்புடன் தனது அலைபேசியை எடுத்து புலனம் (WhatsApp) செயலியை படிக்க ஆரம்பித்தாள்.
ஐம்பதிற்கும் மேல் தீபாவளி வாழ்த்து மற்றும் பார்வார்ட்ஸ் வந்திருந்தது. ‘ராமநாதன் குடும்பம்’ என்று தனது தாத்தா பெயரில் துவங்கப்பட்ட தன்னுடைய பிறந்தவீட்டு குடும்பத்தினருக்கான பிரிவை கிளிக் செய்தாள் லலிதா. இருபது வருடம் முன்னே தான் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய சகோதர, சகோதரிகள், தனது அப்பாவுடன் பிறந்தோர்கள், அம்மா என அனைவரும் இருந்தனர் அந்த பிரிவில். ஆனால், முன்பிருந்த அந்த இணக்கம் அவர்களிடத்தில் இல்லை. அவரவர் குடும்பம், குழந்தைகள், அயல் நாட்டு வாசம் என ஏகப்பட்ட மாற்றங்கள் லலிதாவின் குடும்பத்தில்.
லலிதா அவளது பெற்றோர் வசிக்கும் ஊரில் தான் இருக்கிறாள். இப்போது அவளது பிறந்த வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா மட்டும் தான் இருக்கிறார்கள் . ஒவ்வொரு தீபாவளிக்கும் அம்மா வீட்டிற்கு செல்வது அவளது வழக்கம். முடிந்தபோது மற்ற உறவினர்களும் அங்கு வருவார்கள். போன தீபாவளியன்று எடுத்த குடும்ப புகைப்படத்தை அப்பா அந்த புலனம் பிரிவில் பகிர்ந்திருந்தார்.
அந்த புகைப்படத்தை உற்று நோக்கிய லலிதா கண்களில் பட்டது அவளது தாத்தாவின் முகமே. தனது நூறாவது அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் தாத்தா, குதூகலத்துடன், கையில் மத்தாப்புடன், புது சட்டை அணிந்து, பொக்கை வாய் தெரிய சிரித்துக் கொண்டிருந்தார். இன்றைக்கும் அவர் அதே சந்தோசத்துடன் தன்னை வரவேற்ப்பார், பட்டாசு வெடிப்பார், புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பார் , கருப்பு பர்ஸிலிருந்து ஆசீர்வாத பணத்தை எடுத்துத்தருவார் என்று நினைத்தாள் லலிதா.
ராமநாதன் தாத்தா தான் தனது வாழ்வில் எத்தனை தீபாவளிகளை கண்டுவிட்டார்! இருந்தும் அவர் முகத்தில் வாட்டம் இல்லை, கொண்டாட்டத்தில் குறைவில்லை. அவர் வாழ்வில் காணாத மாற்றங்களையா நாம் கண்டு விட்டோம் என்று நினைத்தாள் லலிதா. உடனே சட்டென்று அவள் உள்ளத்தில் ஒரு பூரிப்பு ஏற்பட்டது. காலம் மாறினாலும், நாம் நமது கொண்டாட்டங்களை குறைத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தாள். “தீபாவளி வந்தாச்சு! தீபாவளி வந்தாச்சு!,” என்று கத்தியபடியே, மின் விளக்குகளைப் போட்டு பத்து வயது லலிதாவாக தனது குடும்பத்தை எழுப்பினாள்.
S.Kumar
November 8, 2021 — 11:44 am
Manju the narration Diwali festival along with family members like thatha,patti,chitti,aunties and their children is superb.The Highlight is patti keeping oil on everybody’s head with singing of Gowri kalyanam song and thatha giving twenty rupees to all who took his blessings brings back nostalgic memories of Diwali 🥳🥳🥳🎉🎉🎉
Manjula
November 8, 2021 — 5:26 pm
Yes Daddy, I haven’t spent a single Deepavali without thinking about our Kannappa Nagar Days.
Gowri
November 8, 2021 — 5:13 pm
Superb Manju..you brought our good old memories of our family… romba yatharthama erunthathu….it was indeed a live picture….
Patty used to peep through the window to wake us up on Diwali..mani ayuduthu ezunturu….
Who is going to wake me up now?
Manjula
November 8, 2021 — 5:27 pm
Thanks Athai. Good old days.
Chandru
November 8, 2021 — 6:22 pm
எனது சிறுவயது மதுரை தீபாவளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்தது இந்தப்பதிவு. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த நாட்கள் அவை. பண்டிகை என்றாலே திருவிழாதான். அதிலும் தீபாவளிக்கு ஈடாக எந்த பண்டிகையும் இருந்ததில்லை. பாட்டசு லிஸ்ட் 3 மாதங்கள் முன் வந்துவிடும். எங்களுக்கு அதுதான் தீபாவளியின் துவக்கம். இந்த நாட்கள் தொலைந்து போனது ஒரு பெரிய இழப்புதான்.நினைவுகள் மலர்ந்து, மனம் மகிழ்ந்தது உங்கள் பதிவைப்படித்து. வாழ்க வளமுடன்.
Deepika Muthukrishnan
November 8, 2021 — 10:56 pm
Such a beautiful narration of our family’s Deepavali celibration in our good old days.Patti’s story telling ,oil keeping,Thatha’s 20 rupees from black purse,Diwali marundhu,sharing of sweets and Karam with sidumoonji Senthil mama.Thatha’s tireless enthusiasm for all his 97 diwalis.Omg !!!I just pictured all these while reading ,and am in mixed emotion now.Thanks for such a beautiful article.
Manjula
November 9, 2021 — 9:37 am
Thanks Deepu 😊
ரேவதி பாலு
November 9, 2021 — 6:37 am
மஞ்சுளா வாழ்த்துக்கள் மிக அருமையான விவரணை. ஒரு தேர்ந்த எழுத்தாளரை போல சரளமான நடை. நகைச்சுவை இழையோடும் எழுத்து.இதை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பி வைத்தால் கூட பிரசுரிப்பார்கள்.
👏👏👌
Manjula
November 9, 2021 — 9:37 am
Thanks aunty! I focused on the narrative. I am very happy to see your comment.
Priyadharshini
November 9, 2021 — 12:36 pm
Very nice one.. Enjoyed reading it.. Narration is beautiful.. Keep writing..
வெங்கட்ராமன்
November 12, 2021 — 9:53 pm
அருமையான சரளமான நடை. கடைசியில் நீங்கள் கொடுத்திருந்த திருப்பம் மிகவும் அருமையாக இருந்தது.
தொடர்ந்து எழுதுங்கள்.