Stories that inspire

எனது தமிழிறைவன் பாரதி – பகுதி 1

பாரதி நீ மண்ணில் மறைந்தாலும் என்னுள் விதையானாய்இந்த தலைப்பில் ஒரு பேச்சுப் போட்டிக்கு தயார் செய்யும்படி என் மகனின் தமிழாசிரியை கூறியிருந்தார்.

உடனே எனக்கு பாரதியை பற்றி படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வருடம் தோறும் அவரது பிறந்த, மற்றும் மறைந்த தினங்களில் மட்டுமே நாம் அந்த மகாகவியை நினைத்து விட்டு பிறகு மறப்பது இயல்பான ஒன்றே. நம்மில் பலர் செய்வதும் கூட. நானும் அவ்வாறே இத்தனை வருடங்கள் கழித்துவிட்டேன்.

அந்த மகாகவி செப்டம்பர் 11, 1921 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இப்போது அவர் மறைந்து 100 ஆண்டுகள் ஆன நிலையில் என்னை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டார். சுப்பிரமணிய பாரதியார் என்ற பல்முகம் கொண்ட மாமேதை, பேரறிவாளியைப் பற்றி நான் படித்து, அனுபவித்ததை இன்று உங்களுடன் பகிர்கிறேன்.

மகாத்மா காந்தி தினமும் கீதையை படிப்பார், அதிலிருந்து தான் அவருக்கு அத்தனை ஆத்ம பலம் கிடைத்தது என்று படித்திருக்கிறேன், ஆனால் எங்கோ, எப்பொழுதோ வாங்கிய ‘பாரதியார் கவிதைகள்’ எனும் புத்தகம் எனக்கு கீதையாகும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சுப்பையா ‘பாரதி’ ஆன கதை

சுப்பிரமணியன் என்ற இயற் பெயர் கொண்ட சுப்பையா, சின்னசாமி மற்றும் லக்ஷ்மி தம்பதியருக்கு டிசம்பர் 11, 1882 ல், திருநெல்வேலிக்கு அருகே உள்ள எட்டயபுரம் சமஸ்தானத்தில் பிறந்தார். அவர் சிறுவயதிலிருந்தே அதீத தமிழ் ஆற்றல் பெற்றிருந்தார். பள்ளியில் அவரது சிந்தனை முழுவதும் தமிழில் எதுகை மோனை சொற்களை சிந்தித்து கவிதை எழுதுவதிலேயே இருந்தது. சுப்பையா பாடலை எழுதுவது மட்டும் அல்லாமல் அதைப் பண் இசைத்துப் பாடுவதிலும் திறமைசாலியாக இருந்தார்.

எட்டயபுரம் சமஸ்தானத்தில் அவர் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அவையினரும், ஜமீன்தாரும், அவரது 11 ஆம் வயதில் ‘பாரதி’ என்ற பட்டத்தைச் சூட்டினர்.

செல்லம்மாவைப் பார்த்து பாடிய முதல் கவிதை

பாரதி வாழ்ந்த கால கட்டத்தில் பால்ய திருமணம் இந்தியாவில் வழக்கமாக இருந்தது. 14 வயதே ஆன பாரதி, கடையம் என்ற ஊரைச் சேர்ந்த செல்லம்மா எனும் 7 வயது சிறுமியை 1897-ல் மணந்தார். மாப்பிள்ளை பாரதி திருமணத்தன்று பாட்டு, கவிதை என தூள் கிளப்பினார்.

‘தேடக் கிடைக்காத அன்னமே – உயிர் சித்திரமே மட அன்னமே –

எனைக் கட்டியணைத்தொரு முத்தமே தந்தால், கைதொழுவேன் உனை நித்தமே

இப்பாடல், பாரதி செல்லம்மாவைப் பார்த்து பாடியது. எத்தனை இனிமை… இப்போது புரிகிறது ஏன் பெண்களுக்கு கவிபாடும் ஆண்களை கண்டால் பிரியம் என்று.

மீசையும் தலைப்பாகையும் வந்ததெப்படி?

பாரதியின் தந்தை சின்னசாமி அவர்கள் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். இதனால் அவரது குடும்பத்தில் பணமுடை ஏற்பட்டது. பாரதி அவருடைய அத்தையான குப்பம்மாள் வீட்டுக்கு காசிக்கு சென்றார். அங்கே அவரது படிப்பை தொடர்ந்தார். பாரதிக்கு அதிக தமிழார்வம் இருந்தாலும் பிற மொழிகள் கற்பதிலும் அவருக்கு அசாத்திய திறமை இருந்தது. விரைவில் சமஸ்க்ருதமும், ஹிந்தியும் பயின்றார்.

ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், ஆங்கில கவிகளான ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்களின் எழுத்துக்களை காசியில் விரும்பிப் படித்தார். அதுவே அவரை தமிழ் மொழியை எளிய நடையில் அனைவரும் படித்து ரசிக்கும் வகையில் எழுதத் தூண்டியது.

அதுமட்டும்தானா, காசி வாசம் பாரதியின் அறிவு மற்றும் சிந்தனையை விரிவடையச் செய்தது. ஆனி பெசன்ட் மற்றும் அக்கால சுதந்திர போராளிகளின் சொற்பொழிவுகள் அவரை சுயாட்சி, இந்திய தேசம், தாய் நாடு போன்ற கருத்துக்களை சிந்திக்க வைத்தது. மூட நம்பிக்கைகள் மற்றும் சாதியினால் நம் நாட்டில் நடக்கும் அவலங்களையும் அடியுடன் வெறுக்கச் செய்தது. இந்த மனமாற்றம் காரணமாக அவர் சிந்தனைக்கேற்ப தன் நடை, உடை மற்றும் பாவனையை மாற்றிக் கொண்டார்.

மீசை வைத்தார், குடுமியைத் துறந்தார், தலைப்பாகை அணிந்தார், ஒரு சிப்பாய் மாதிரி நடை பயிலத் துவங்கினார். தனது எழுத்தில் உள்ள கம்பீரத்தை தனது உருவத்திலும், உடையிலும் கொண்டு வந்தார். இதுவரை கவி பாடும் சிறுவனாக இருந்த  பாரதி, காசியில் நாட்டு சுதந்திரத்திற்காக போராடும் ஒரு இளைஞனாக உருமாறினார்.

(தொடரும்…)

« »