பாரதியின் பத்திரிகை வாசம்

பாரதி சிறிது காலம் எட்டயபுரம் சமஸ்தானத்தில் கவியாக இருந்தார். அவரது மணவாழ்வையும் செல்லம்மாவுடன் அங்கு துவங்கினார். ஆனால், அவரது சிந்தனைக்களம் பெரியதாக இருந்தது.

1900 -ங்களில் ஐரோப்பிய நாடுகளின் ஒருமைப்பாட்டிற்கான போராட்டங்களை பற்றி நிறைய படித்திருந்தார். நமது நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டு கிடப்பதை எண்ணி வருந்தினார். யானைப் பசிக்கு சோளப்பொரி போல, அவருடைய அறிவுப் பசிக்கு எட்டயபுரத்தால் தீனி போட முடியவில்லை.

இந்நிலையில், சென்னையில் சுதேசி மித்ரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்த சுப்பிரமணிய ஐயர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக, பாரதி சுதேசி மித்ரனில் உதவியாசிரியராக பணிபுரிய சென்னை வந்தார். இப்போது பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் தான் சுதேசி மித்ரன் பத்திரிகை அலுவலகம் இருந்தது. பாரதியும் அங்கே அருகில் ஒரு வீட்டைப் பார்த்துக் கொண்டு சென்னைக்கு குடியேறினார்.

Armenian Street Name Board

சுதேசி மித்ரனில் அவர் எண்ணற்ற ஆங்கில கட்டுரைகளை, அதன்  உணர்ச்சி மற்றும் பொருள் மாறாத வகையில் தமிழில் மொழி பெயர்த்தார். அப்போது வங்கப் பிரிவிணை(1905) இந்தியாவில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தமிழ் நாட்டில் அதன் தாக்கம் பெரிதாக இல்லை . பாரதியார் தனது கட்டுரைகள் மூலமாக இந்தியா நமது நாடு என்ற எண்ணத்தை தமிழ் மக்களுக்கு ஊட்டினார்.

‘சக்ரவர்தினி’ எனும் பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட பத்திரிகையிலும் ஆசிரியராக பணி புரிந்தார். இந்த வாய்ப்பின் மூலமாக பெண் உரிமை, பெண் கல்வி,ஆணுக்கு பெண் சமம் போன்ற சிந்தனைகளை தம் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தினார். அதே கால கட்டத்தில் ‘பால பாரத்’ எனும் ஆங்கில பத்திரிகையிலும் எழுதினார்.

காலப் போக்கில் இந்தியா, விஜயா , சூர்யோதயம், கர்மயோகி போன்ற பத்திகைகளில் எழுதினார். பல சமயம் ஒரே நேரத்தில் நான்கிலும் எழுதி இருக்கிறார். எழுதுவது என்று வந்து விட்டால் பாரதிக்கு சோர்வேது? எனும் அளவிற்கு தரமான கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதி உள்ளார்.

பாரதி பத்திரிகைகளில் பெரும்பாலும் நாட்டு விடுதலைக்காக மட்டும் எழுதினார் என்று கூற முடியாது. அவர் கர்மயோகியில் சிறந்த ஆன்மீக கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இன்னும் சொல்லப் போனால் அவர் பகவத் கீதையை கூட தமிழில் மொழி பெயர்த்து கர்மயோகியில் வெளியிட்டுருக்கிறார். ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக அந்த பிரதிகள் நமக்கு கிடைக்கவில்லை.

பாரதியின் தமிழ் இனிமை மட்டுமல்ல எளிமையும் கூட

அப்போது தமிழ் பத்திரிகைகளில் ‘மணிப்பிரவாள நடை’ என்று அழைக்கப்படும், வடமொழி  தாக்கம் நிறைந்த தமிழ் மொழியிலேயே செய்திகள் வெளியாயின. பாரதி இந்த நடையை மாற்றி, நாம் பேச்சு வழக்கில் பேசும் தமிழிலே கட்டுரைகள் மற்றும் கவிதைகள்  எழுத ஆரம்பித்தார்.

அவர் நம் சமூகத்தை பற்றி , பல தொழில்கள் செய்யும் சாமானிய மனிதர்கள் பற்றி நிறைய எழுதினார். பாரதி அடுத்த தலைமுறை தமிழ் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இருந்தார். அவரது வழியை பின்பற்றி எழுதிய பாரதி தாசன், கண்ண தாசன், கவிமணி , ஜெயகாந்தன், ஜானகிராமன்  போன்ற எழுத்தாளர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  இருந்தது. 

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது; சண்டையும் தொலையுது;
தரித்திரம் போகுது; செல்வம் வருகுது;
படிப்பு வளருது; பாவம் தொலையுது;

புதிய கோணங்கி

பாரதியும் பாரத மாதாவும்

வந்தே மாதரம் – ஜெய வந்தே மாதரம்

ஆரிய பூமியில் நாரிய ரும்  நர

சூரிய ரும் சொல்லும் வீரிய வாசகம்

வந்தே மாதரம் – ஜெய வந்தே மாதரம்

அப்பப்பா எத்தனை வீரியம்! இதை படிக்கும் போதே நாடி நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொள்கிறது . பாரதி பாட இந்த பாடலைக் கேட்டால் கல்லுக்கு கூட சுதந்திர தாகம் வந்து விடும் போல.

வங்காள கவி ‘பங்கிம் சந்திர சாட்டர்ஜி’ எழுதிய ‘வந்தே மாதரம்’  எனும் பாடல் பாரதிக்கு மிகவும் பிடித்த ஒன்று. ‘வந்தே மாதரம்’ என்றால் ‘தாயை வணங்குவோம்’ என்று பொருள். அப்பாடலை தமிழில் மொழி பெயர்த்து சுதேசி மித்திரனில் வெளியிட்டார். இதன் காரணமாக ‘வந்தே மாதரம்’ எனும் தாரக மந்திரம் தமிழகம் எங்கும் தீ போல் பரவியது.

பாரதியார், பாரத மாதாவை தேசிய ஒருமைபாட்டிற்கான ஒரு சக்தியாக பாவித்தார். தெய்வ பக்தி ததும்பி வழியும் இந்திய நாட்டில் இந்திய மக்கள் பாரத மாதாவை வணங்காமல் போவார்களா என்ன?

பாரதியின் தூய உள்ளம் பாரத மாதாவை நம் அனைவரின் தாயாக, சுதந்திர தேவியாக , சக்தி ஸ்வரூபமாக நாள்தோரும் துதித்தது. பக்தி பாடல்களின் வரிசையில் பாரத மாதாவிற்காக பாரத மாதா நவரத்தின மாலை, பாரத தேவியின் திருதசாங்கம், பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி என்று எழுதி தன் மனக் கோவிலில் வாசம் செய்யும் அந்த தாய்க்கு பூஜைகள் செய்தார்.

அவர் பாண்டிச்சேரியில் வசித்த காலத்தில் பாரத மாதாவிற்காக இரு சிலைகள் வடிவமைத்திருக்கிறார். குயவர் பாளையத்தை சேர்ந்த குயவர்கள், அவரது கற்பனைக்கேற்ப காலில் விலங்கு போட்ட நிலையில் சிந்தனை செய்யும் வண்ணம் சர்வ அலங்கார பூஷிணியாக பாரத மாதாவை வடிவமைத்துள்ளனர் என்று படித்தேன். இப்படியும் நாட்டுப்பற்று, மயக்கம் , சுதந்திர தாகம் ஒருவரிடம் இருக்க முடியுமா என்று எண்ணி வியந்துபோனேன்.

(தொடரும்…)