Stories that inspire

எனது தமிழிறைவன் பாரதி – பகுதி 3

பாரதி ஒரு தீர்க்கதரிசி

1. தமிழர்கள் ஹிந்தி கற்க வேண்டும்

இக்காலத்தில் தமிழ் நாட்டில் ஏற்படும் பல  பிரச்சனைகளுக்கு பாரதி அப்போதே தீர்வுகள் கண்டுள்ளார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியவுடன், இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க ஒரு மொழி வேண்டும் என அவர் நினைத்தார். அதற்காக ஹிந்தி மொழியை தமிழர்கள் கற்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் இளைஞர்களை திரட்டி ‘ஜனசங்கம்’ என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கினார். சென்னை, திருவல்லிக்கேணியில் ஜனசங்கம் இயங்கி வந்தது. இந்த சங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தமிழ் மக்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்தனர்.

இதை தவிர, நாடு தழுவிய தேசிய சிந்தனைகளை தமிழ் மக்களிடம் பரப்பினர். பல பொதுக்கூட்டங்களை சென்னை கடற்கரையில் நடத்தினர். இந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பிரசங்கம் செய்தனர். மக்களிடம் நாம் எல்லோரும் இந்திய நாட்டு மக்கள் என்ற செய்தியை நிலை நாட்டினர்.

பாரதி மெரீனா கடற்கரையில் பல முறை சிறப்புரை ஆற்றியிருக்கிறார். பாரதி பேசிய கூட்டங்களுக்கு, அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்காகவே கூட்டம் வந்தது. முதலில் பாரதி பேசி முடித்து  பாடிவிட்டால், கூட்டம் கலைந்துவிடும். இதனால் பாரதியின் பிரசங்கத்தை கடைசியில் வைத்துக்கொள்வது வழக்கம்.

2. ஆரியர், திராவிடர், ஜாதி பாகுபாடு இதனைப் பற்றி அவர் கூறியது 

பாரதி பொய்யும் புனையுமாக, திராவிடர்கள் ஆரியர்கள் என்று வீண் சண்டைகள் வளர்ப்பது ஹிந்து சமுதாயத்திற்கே கேடு விளைவிக்கும் என்று நன்கு உணர்ந்திருந்தார். அவருடைய சிந்தனையில் ஜாதி என்றால் தேசம், ஜாதீயம் என்றால் தேசியம்.

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்

ஜன்மம் இத்தேயத்தில் எய்தினராயின்

வேதியராயினும் ஒன்றே அவர்

வேறு குலத்தின ராயினும் ஒன்றே

இதுவே பாரதியின் கூற்று.

3. தமிழ்ப் பற்று

யாமறிந்த மொழிகளிலே  தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்;

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்

என்று கூறிய பாரதி தான் ‘மெல்ல தமிழினிச் சாகும் ‘ என்றும் எழுதியுள்ளார். ஆனால், அந்த வரியின் பொருள் என்னவென்றால் நாம் நமது தமிழ் மொழியை காலத்திற்கேற்ப வளர்த்துக் கொள்ள வேண்டும் . அறிவியல், தொழில்நுட்பங்களுக்கு  ஏற்றார் போல தமிழில் புதிய சொற்கள் உருவாக்க வேண்டும் என்று  சுமார் 100 ஆண்டுகள்  முன்னரே பாரதி கூறியுள்ளார்.

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

மெத்த வளருது மேற்கே – அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை – அவை

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;

மெல்ல தமிழினிச் சாகும் – அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

இதுவே பாரதி எழுதிய ‘மெல்ல தமிழினிச் சாகும்’ பாடலின் முழு அர்த்தம். இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு எத்தனை சினிமா வசனம் உள்ளது… அப்பப்பா! அவர் விழைந்ததோ தமிழ் மொழியின் வளர்ச்சி மட்டுமே.

4. பேச்சுரிமை பற்றி பாரதியின் கருத்து அவர் எழுதியபடியே

“பேச்சுரிமை என்பது, நல்லறிவு படைத்த அரசின் உண்மைத் தோழன். மனிதர்களின் குரலை ஒடுக்கினால், அவர்களது மனம் கசந்து போகும். இவ்வுலகோ மனமெனும் அஸ்திவாரத்தை கொண்டது. ‘எண்ணங்களும் பொருட்களே.’

பதினாயிரம் முட்டாள்களின் கண்மூடித்தனமான விசுவாசத்தைவிட நூறு புத்திசாலிகள் நன்மதிப்பையே விவேகமுள்ள அரசன் விரும்புவான். எல்லாக் கட்சிகளும் பேச்சுரிமை பெற்றாலே அவ்வரசாங்கத்திற்கு நன்மதிப்பு இருக்கும்.”

ஒருமை,சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் முதலான கருத்துகளை தமிழ் நடையில் புகுத்தி, எளிய வரிகள் மூலம் தமிழர்களின்  சிந்தனையை மாற்றிய நம் பாரதி ஒரு தீர்க்கதரிசி.

பாரதியின் ஆன்மீகம்

பாரதி 100 ஆண்டுகள் முன்பு நம்முடன் வசித்தபடியால் பாரதியின் புகைப்படங்கள் நம்மிடையே பல உள்ளன. நம்மில் பலருக்கு பரிச்சயமான பாரதியின் முகம் என்றால் மீசை, முண்டாசு அதனுடன் சேர்ந்து அவர் நெற்றியில் தீர்க்கமாக நிறைந்திருக்கும் குங்கும பொட்டு . ஆனால் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டிருக்கும் பாரதியின் முகத்திலோ அந்த பொட்டை காணோம் . இதென்ன சமூகநீதி என்ற பெயரில் சரித்திரத்தை மாற்ற முயற்சிக்கும் ஒரு பாங்கு! எனக்கு இச்சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

பாரதி சமூக கொடுமைகள் மற்றும் ஜாதி, மத பாகுபாடை எதிர்த்து குரல் கொடுத்த ஒரு ஆஸ்திக ஹிந்து கவி! அவர் எழுதிய பக்தி பாடல்களோ ஏராளம்… கடவுள் பக்தியையும், பாரதியையும் பிரித்துப் பார்ப்பது என்பது இயலாத ஒரு காரியம். அவருக்கு சக்தியின் மீதும், கண்ணனின் மீதும் உள்ள பிரியத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

பயத்திலிருந்து விடுதலை பெற பாரதி தெய்வங்களின் அருள் நோக்கி வேண்டுகிறார். மகாசக்தியை போற்றும்போது தன்னை மறந்து இறையுணர்வில் ஒன்றி விடுகிறார். நாம் சிறுவயதில் கேட்டு மகிழ்ந்த எளிமையான தமிழ் இறை பாடல்கள் – ‘ தீராத விளையாட்டு பிள்ளை,’ ‘காக்கை சிறகினிலே நந்த லாலா,’ ‘ வருவாய் மயில் மீதினிலே, வடிவேலுடனே வருவாய், முருகா,’ ‘வெள்ளை தாமரை பூவில் இருப்பாள்,’ ‘ யாதும் ஆகி நின்றாய் காளி,’ போன்றவை பாரதி எழுதியவையே.

காட்டு வழிதனிலே -அண்ணே!

கள்ளர் பயமிருந்தால்? – எங்கள்

வீட்டுக் குலதெய்வம் – தம்பி

வீரம்மை காக்குமடா!

நிறுத்து வண்டியென்றே – கள்ளர்

நெருங்கிக் கேட்கையிலே – எங்கள்

கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா!”

இவ்வளவு எளிமையான நடையிலே  தெய்வ நம்பிக்கையை ஊக்குவிக்க முடியுமென்றால் அது பாரதியால் மட்டுமே சாத்தியம் . ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்,’ என்று படித்ததுண்டு, பாரதியை படித்தால் எனக்கு கூட கவிதை எழுத தோன்றுகிறது .

புதுச்சேரியில் வசித்து வரும்போது பாரதிக்கு ‘குவளைக் கண்ணன்’ என்பவர் இனிய நண்பன் ஆனார். அவரது நட்பால் ஆழ்வார்களின் வைணவ பாசுரங்களை பாரதி படிக்கலானார். கண்ணனது பிள்ளை பருவம் பற்றி பெரியாழ்வார் எழுதிய பாசுரங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. இதன் அடிப்படையில் ‘கண்ணன் பாட்டு’ எனும் கவிதை தொகுப்பை எழுதினார். இருபத்துமூன்று பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பில் கண்ணனை தந்தையாக, பிள்ளையாக, காதலனாக, காதலியாக, நண்பனாக, ஆண்டவனாக மற்றும் சேவகனாகவும் காண்கிறார் பாரதி. இறுதியில் கண்ணனே அன்னை கண்ணம்மாவாக மாறி, பாரதியின் இதயத்தில் அமர்கிறார். ‘நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!’ பாடலுடன் கண்ணன் பாட்டு முடிவடைகிறது.

பாரதி அவரது கடைசி காலங்களில் ஒரு ஞானியாகவே மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். சரணாகதிபற்றி பாரதியார் கூறியதை கேட்போம்…

“அமுதவாழ்வு பெறச் சரணாகதியே சாதனம். சமய வாழ்வினுக்காக மனிதர் தம் செல்வத்தையும், உரிமையையும், உயிரையும் கொடுப்பார்கள். சமயங்கள் யாவும் மானுடத் தன்மையைத் தெய்வீக நிலைக்கு மாற்றிக்கொள்ள வேண்டுமென அறை கூவுகின்றன. இம் மாறுதல் மட்டும் மனிதர் செய்ய விரும்புவதில்லை. நாம் இச் சம்சாரமெனும் மதுவிற்கு அடிமையாகிப் போனோம். தெய்வ நினைப்பெனும் தீ என்னை  எரிப்பதால் நான் மாய்வதில்லை. தீயினின்றும் ஒளி மிகுந்து, மரணத்தை வென்றவனாக வெளி வருகின்றேன். சகோதர சகோதரிகளே, எல்லையிலாப் பரஞ்சோதியில் கலந்து சாகா வரம் பெறுவோம். வாரீர்!”

ஆம் இன்றளவும் நாம் பாரதியின் கவிதைகளை படித்துப் போற்றுகிறோம் என்றால் அந்த மகாகவி அமரத்துவம் பெற்று நம்முடன் வாழ்கிறார் என்றுதானே பொருள்.

(தொடரும்…)

« »