Stories that inspire

எனது தமிழிறைவன் பாரதி – பகுதி 4

பாரதியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒருபுறம் உள்ளம் பூரிக்கிறது, மறுபுறம் உள்ளம் குமுறுகிறது. காரணம், அவர் வாழ்நாளில் பட்ட துன்பங்களே! உலகில் வேறு எங்கு பிறந்திருந்தாலும், பாரதி போன்ற பன்முக எழுத்தாளரை, கவிஞரை அனைவரும் கொண்டாடியிருப்பர், ஆனால் அவரோ இங்கு சாகும் வரை ஒரு பத்திரிகையாளராகவே  வாழ்ந்து  இறந்து விட்டார்.

ஆங்கிலேயரை எதிர்த்து எழுதிய காரணத்தால் அவர் பாண்டிச்சேரியில் வசிக்க நேறிற்று, அங்கும் அவர் எழுதிய பத்திரிகைகள் மூடப்பட்டமையால் அவரும் அவர் குடும்பத்தினரும் வறுமையால் மிகவும் தவித்தனர். இருந்தும் பாரதியின் கவிதைகள் நிற்கவில்லை. அச்சிட வழியில்லாமல் இருந்தும், பாரதியின் பாடல்களை அவரது நண்பர்கள் கேட்டு மகிழ்ந்தனர். 1911 துவங்கி 1920 வரை அவர் சொல்வதற்கரியாத இன்னல்களை சந்தித்தார் … ஆனால் இந்த காலக் கட்டத்தில் தான் அவரது முப்பெரும் பாடல்களான கண்ணன் பாட்டு,’ ‘பாஞ்சாலி சபதம்,’ மற்றும் குயில் பாட்டுஆகியவற்றை எழுதினார்.

அவரைப்  போல ஒரு சிந்தனையாளரை எழுதவிடாமல் சம்சார சாகரம் அவரை ஒரு பக்கம் கவலைக் குள்ளாக்கியது. அது மட்டும்தானா அவரது புரட்சிகரமான சிந்தனைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர் வாழ்ந்த காலம் இல்லை. அச்சமயத்திலோ பெரும்பாலானோர் பாரதியை உணர்ச்சிவசப்படுபவன் , கிறுக்கன் என்று தான் நினைத்தனர். பாரதியின் எழுத்துக்களை தமிழர்கள் புரிந்துகொள்ளும் காலம் வந்த போது, அதை அனுபவிக்க பாரதி நம்முடன் இல்லை.

பாரதியின் அரசியல் சிந்தனையில் தான் எத்தனை வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியை காலப் போக்கில் காண முடிந்தது. Extremist என்று சொல்லப்படும் தீவிர தேசபக்தி எண்ணங்கள் கொண்டிருந்த பாரதி, திலகரை மானசீக குருவாக கொண்ட பாரதி, அவரது கடைசி காலத்தில் மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டம், மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1920-ல் மீண்டும் சுதேசி மித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராக சேர்ந்த போது பாரதியின் எழுத்துக்களில் நாம் அதை உணர முடிகிறது. அவருடைய கடைசி வியாசம் ‘ரவீந்திரநாத் தாகூரை’ப் பற்றியது. அதிலிருந்து சில வரிகள்…

கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்தரரைப்போல அடைய வேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுக்களோ வங்க பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புக்களைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான்  இந்தக் கீர்த்தி.

இந்த வரிகள் நமது பாரதிக்கும் பொருந்தும்…

பாரதி தரும் உத்வேகம்

சினிமா பாடல்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? எனக்கு கூட பாரதி பரிச்சியம் ஆனது சினிமா பாடல்கள் மூலமாக தான். ஒன்றா, இரண்டா அவர் எழுதிய பாடல்கள்… நான் மிகவும் விரும்பிப் பார்த்த அணைத்து கே.பாலசந்தர் படங்களிலும் பாரதியின் பாடல் வரிகள் இடம் பெற்றிருக்கிறது . சிறு வயதில் அவை பாரதி எழுதியது என்று உணரமுடியாமல் போனாலும், அந்த வரிகளின்  தாக்கத்தை மறுக்க முடியாது. வறுமையின் நிறம் சிவப்பு,’ ‘உன்னால் முடியும் தம்பி,’ ‘சிந்து பைரவிபோன்ற படங்களில் எத்தனை காட்சிகளில் பாரதியார் பாடல்களோடு உவமை காட்டியிருக்கிறார் பாலசந்தர் அவர்கள். பாரதியின் வரிகள்  இதுபோல பல்லாயிரக்கணக்கான தமிழ் படைப்பாளிகளுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

சமீபத்தில் ஒரு கட்டுரையில் படித்து பிடித்து போன வரிகள் “தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார், தனது ஏதாவது ஒரு வரியின் மூலம் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட்டிருப்பார்.”

மனதில் உறுதி வேண்டும்                                                                                 

வாக்கினிலே இனிமை வேண்டும்                                                                        

நினைவு நல்லது வேண்டும்      

நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய் பட வேண்டும்                                                                                                              

கைவசமாவது விரைவில் வேண்டும்                                                                                               

தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

எனக்கு மிகவும் பிடித்த வரிகள், ‘சிந்து பைரவி’ படத்தில் இப்பாடலும் உண்டு.

https://youtu.be/8fW35x121og

(முற்றும்)


பாரதியைப் பற்றி நான் எழுதிய 4 பகுதிகளும் என்னுடைய பாரதி பற்றிய தேடலின் முதல் அத்தியாயம் தான். மேலும் பாரதியை அறிய ஆவல் என்னுள் தணலாக உள்ளது. பாரதி தாசன், பாரதி புத்திரன் , பாரதி எனும் புனைப் பெயர்களின் பொருள் இப்போது தான் புரிகிறது. பாரதி என்பவர் கவி மட்டுமல்ல, தமிழர்கள் அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இந்த தொகுப்பினை எழுத பேருதவியாக இருந்த 2 நூல்கள் – இலந்தை சு.இராமசாமி எழுதிய மகாகவி பாரதிமற்றும் பிரேமா நந்தகுமார் அவர்கள் எழுதிய பாரதியார்‘.

பாரதி சிறிது காலம் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்தார். அந்த பள்ளியில் படித்த மாணவர், மற்றும் எனது நண்பருமான திரு. சந்திரசேகர் அவர்கள் எனக்கு அங்கே எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் . அதிலிருந்து சில படங்கள் …

Sethupathi School, Madurai
Classroom where Bharathiyaar taught
பாரதி பாடம் நடத்திய வகுப்பறை

எனது இந்த கட்டுரையை எழுதி முடிக்க சிறிது கால தாமதம் ஆன போது அவர் அனுப்பிய இப்படங்கள் பாரதியிடமிருந்து வந்த உந்துதலாகவே நான் கருதினேன்.

« »