சமீபத்தில் எங்கள் வீட்டின் BSNL தொலைபேசி இணைப்பை துண்டித்தோம் , காரணம் அதற்கான தேவை இப்பொழுது இல்லை. ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் என்னை அன்று வாட்டியது . அந்த தொலைபேசி இணைப்பு எங்கள் வீட்டிற்கு வந்த காலத்திற்கு என் மனம் சிறகடித்துச் சென்றது. மனம் மட்டும் தானா நானும் அப்போது சிறகடித்து செல்ல கூடிய குழந்தை பருவத்தில் இருந்தேன் . அது 1995 ஆம் வருடம், நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் வெகு நாட்கள் காத்திருந்து எங்களுக்கு அந்த இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ இரண்டு வருடம் இருக்கும், அப்பொழுது எல்லாம் தொலைபேசி இணைப்பு கிடைக்க வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருக்க வேண்டும். அது வரையில் பெரும்பாலும் செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே காணப்படும் தொலைபேசி, 1990 – 2000 ஆம் காலக்கட்டத்தில்தான் நடுத்தர குடும்பத்தினருக்குக் கிட்ட ஆரம்பித்தது .
தெருவுக்கு ஒன்று அல்லது இரண்டு வீட்டில்தான் இருக்கும் தொலைபேசி. மற்றவர்கள் அனைவரும் அந்த வீட்டின் தொலைபேசி எண்ணையே முக்கியமானவர்களுக்கு கொடுப்பார்கள். அழைப்பு வந்தால் அந்த வீட்டிலிருந்து ஒரு சிறுவன் அல்லது சிறுமி ஓடி வந்து தகவல் சொல்லி அழைத்துச் செல்வார்கள் . இந்த ஏற்பாடு நமக்கு வருகிற அழைப்பிற்கு மட்டுமே. நாம் ஒருவருக்கு தொலைபேசியில் அழைக்க வேண்டும் என்றால் தொலைபேசி பூத் என்று அழைக்கப்படும் கடைகளுக்கு சென்று அழைக்க வேண்டும். அங்கே நாம் பேசும் நேரத்தை அளவெடுக்க டைமர் எனப்படும் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும், அதில் நாம் பேசிய நேரத்திற்கான பணமும் தெரியும் , இதனால் வெகு நேரம் பேசாமல் தேவைக்கு ஏற்ப பேசுவோம். Trunk call என்று கூறப்படும் வெளியூர் அழைப்புகள் அனைத்தும் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கும். இதற்கு operators என்று அழைக்கப்படும் மக்கள் நம்முடைய அழைப்பை இணைத்து விடுவார்கள் .
இன்று நமது தொழில்நுட்ப வளர்ச்சியை நினைக்கும்போது மலைப்பாக உள்ளது. இணையம் வழியாக நாம் கண்டம் விட்டு கண்டம் மிகவும் எளிதாக பேச முடிகிறது. பணம் என்பதை ஒரு பொருட்டாக மதிக்காமல் விதவிதமாக திறன்பேசிகளை வாங்கிக் குவிக்கிறோம். ஒரு பக்கம் இந்த வளர்ச்சி ஆனந்தத்தை அளிக்கிறது , ஆனால் மறுபக்கம் அந்த நாட்களின் எளிமையை இழந்து விட்டோமோ என்ற ஏக்கமும் வருகிறது.
எனது பள்ளிக்கூட நண்பர்களிடம் தொலைபேசியில் அளவளாவிய நினைவுகள் எனக்கு இன்றும் மகிழ்ச்சியை தருகிறது. அப்பொழுதெல்லாம் ஒரு அழைப்பு என்பது மூன்று நிமிடம். அதற்கு ஒரு ருபாய் செலவாகும். எனது தாத்தா மிகவும் கறார் பேர்வழி, அவர் ஒவ்வொரு முறை நாங்கள் யாரையாவது அழைக்கும்போதும் அருகில் உட்கார்ந்து கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டேயிருப்பார். மூன்று நிமிடம் ஆனதும் அழைப்பைத் துண்டிக்கும்படி செய்கை காட்டுவார். அந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட சிரிப்பாக வருகிறது .அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவர்களை அழைப்பதும், அவர்களுக்குச் செய்தி குறித்துக்கொள்வதும் இனிமேல் நடவாது. தொலைபேசியின் நினைவுகளை போலவே அந்த நாட்களின் நினைவுகளையும் அவ்வப்போது நினைத்து மகிழ்ந்து கொண்டிருப்பேன்.
தொலைபேசி பூத்துகளும் சரி, தொலைபேசியும் சரி இனிமேல் வரப்போவதில்லை. சில ஆண்டுகள் கழித்து திறன்பேசிகள் இருக்குமோ தெரியாது, ஆனால் விஞ்ஞானம் என்ன வளர்ந்தாலும், நாம் ஒருவருக்கு ஒருவர் பேசுவது குறையாது என்று நம்புகிறேன்.
Indumathi Mohan
November 7, 2021 — 1:40 pm
Nostalgic. Very nicely written. Kindled all the sweet memories in me. Thanks for sharing Manju.