ன் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும்.

சமீபத்துல சென்னையில இருக்கற ஒரு பேமஸ் மாலுக்கு   குடும்பத்தோட  போனேன். மால் திறக்குற நேரம் காலை 11 மணி. நாங்க 11:30 மணிக்கு போனபோது, இரண்டு தளங்கள்ல பார்க்கிங் முடிஞ்ச நிலையில, மூன்றாவது தளத்துலதான் பார்க்கிங் கிடைச்சது.

Shopping Mall
Img source: Wikimedia Commons

மாலுக்குள்  நுழைஞ்சா திருவிழா போல ஜே ஜே ன்னு கூட்டம் அலைமோதிச்சு. எங்கிருந்துதான்  இத்தனை கூட்டம் வருது? ன்னு  யோசிச்சுகிட்டே நாங்க நடக்க,  எதிர்ல என்ன நடக்குது, யார் வராங்கன்னு நினைவே இல்லாம,  அவங்க அவங்க குடும்பத்தோட (அ) நண்பர்களோட   செல்ஃபி எடுத்துட்டு, உணவகங்களை (சாரி) உணவு ஸ்டால்களை நோக்கி படையெடுத்துட்டு இருந்தாங்க. ஏன்  உணவு ஸ்டால்கள்னு சொல்றேன் தெரியுமா? நூற்றுக்கணக்குல ஆளுங்க வரும் மால்ல  உக்கார ஒரு பெஞ்சோ, சேரோ கூட கிடையாது.   உக்காரனும்னா உணவு ஸ்டால்களுக்கு போயே தீரணும். ஏன்னா அங்கதான் உக்கார இடம்  இருக்கு. உக்கார்ந்தா,   ஏதாவது  வாங்கிச் சாப்பிடாம இருக்க முடியுமா? அவங்க சொல்ற விலையை, வாய்மூடி கொடுத்துட்டு, வயிற்றெரிச்சலோட சாப்பிட வேண்டியதுதான். ஒரு பில்டர் காபி கெட்ட கேட்டுக்கு நூற்றியறுபது ரூபாயாம்.  அத கேட்டுட்டு நாங்க பயந்து ஓடியே வந்துட்டோம். என் பாட்டி  ஹோட்டல்ல  முப்பது ரூபாய் கொடுத்து காபி குடிக்க மாட்டாங்க.  “இருபது ரூபாய்க்கு அரை  லிட்டர் பால் கிடைக்கும் போது,  குடும்பமே காபி போட்டு குடிச்சிடலாம்,”  ன்னு சொல்லுவாங்க. அவரை மாலுக்கு அழைச்சிட்டு வந்தா என்ன ஆகும்?

அடுத்த காமெடி, இங்கே ஒவ்வொருவரும் அணிந்து செல்லும் டிரஸ்கள் தான்… பலே! நம்ம ஊர்ல வழக்கமா மக்கள் அணியும் உடைகள  மாலுல கொஞ்சம் பேரே போட்டுட்டிருந்தாங்க. திருச்சில இருக்கும் என் ப்ரெண்ட் சொல்லுவா “மஞ்சு இந்த புடைவை,  துப்பட்டா  போட்டு சல்வார் கமீஸ்  போடறது எல்லாம் திருச்சியோட  சரி. நான் என் தம்பிய பார்க்க பெங்களூரு போனா எப்போதும் ஜீன்ஸ் தான், இல்லாட்டி நம்மள ஒரு பய மதிக்க மாட்டான்.”  அப்போ, என்ன இவ இப்படி பேசறா?  ன்னு தோணிச்சு. ஆனால், அதோட அர்த்தத்தை இங்க தான் பார்த்தேன். ஏதோ  ஒரு சமூக அழுத்தத்திற்கு உட்பட்டு இவங்க செயற்கையா உடை அணியறாங்களோன்னு தோணிச்சு.

எனக்கு மால்கள்  புதுசில்ல. சுமார் பண்ணன்டு வருஷம்  முன்னாடி  நான் மேற்கத்திய நாடுகளில் சில மால்களுக்கு போயிருக்கேன். அப்போது இந்தியாவுல பெரிசா மால்கள் இல்லை.  அப்புறம் எப்பயாவது இங்க மால் போவேன். ஆனால், இப்போது நான் கண்ட காட்சியோ … “நம்ம புள்ளிங்க  மேற்க்கத்தியர்களையே முந்தி விட்டாங்களே” ன்னு ஆச்சரியப்பட வைச்சது.  ஆங்கில மேகசின்கள்ல வரும் விளம்பர மாடல்கள் போல பல  இளவட்டங்கள் உடை போட்டுட்டு  செம்ம ஸ்டைலாக  போனாங்க. இந்த ஸ்டைலும் உடைகளும் பொருத்தமாக இருக்கும் கும்பல் ஒரு 20% ன்னு வச்சுப்போம், பாக்கி 80% என்னைப்போல கர்நாடகம். சரி, அவங்களுக்கு ஏற்ற உடையை போடுவாங்கன்னு  பார்த்தா… நைட்டி போல ஒரு பெரிய பிராக் போட்டுட்டு படு காமெடியாக உலாவராங்க. ஆண்கள் எவ்வளவோ தேவலாம். சில  பொண்ணுங்க  பேச்சும், உடையும், மேக்அப்பும் … கல்சுரல் ஷாக் தான்.  “இந்த வெயில்ல நான் எப்படி ஆட்டோல போவேன்? கார் தான் வேணும்,”  ன்னு ஒரு பொண்ணு , கூட இருந்த பையன  அதட்டினா. “யாரும்மா நீ? நல்லா தமிழ் பேசற, சென்னை வெதர்  பத்தி உனக்கு தெரியாதா? ஆட்டோல தானேம்மா  போக சொல்றான், பஸ்லயா  உன்ன போகச் சொல்றான்?” ன்னு  தோணிச்சு. ஒருமுறை சிங்கப்பூருக்கு விடுமுறைக்கு சென்ற என்  பிரண்ட், “அப்பப்பா!  சிங்கப்பூர்ல இருந்துட்டு, இந்த வெயில் தாங்க முடியல!” ன்னு அலுத்துக்கொண்ட சம்பவம் ஞாபகம் வருது.

என் பாட்டி, என் அம்மாவெல்லாம் புடைவையைத்  தவிர வேறு உடை  அணிஞ்சதில்ல. நான் சல்வார் கமீசுக்கு  பழக்கப்பட்டு போனதால், பாட்டி ஆனா அதான்  போடுவேன்.  இப்போ இங்க பாக்குற இந்த பிராக் போடும் பியூட்டீஸ், பாட்டியாகும் தருணத்தை நெனைச்சுக் கூட பார்க்க முடியல.   இவங்க இப்படி அல்ட்ரா மாடர்னா வலம்  வரட்டும், யாரும்  வேணாம்ன்னு சொல்லல… ஆனா நம் பாரம்பரிய உடைகளான வேஷ்டி, புடைவை போட்டுட்டு இங்க வரவங்கள  இந்த மாடர்ன் கும்பல் பார்க்கும் விதமே அலாதி.

அந்த மாலில் குடுமி, காதில் கடுக்கன், வேஷ்டி சட்டை போட்டுட்டு  ஒரு குழு வந்தது.  அவங்க எல்லாரும் 16 – 20 வயசிருக்கும் வேதம் படிக்குற பசங்கன்னு நினைக்கிறேன். அவங்கள பார்த்த உடன் இந்த மாடர்ன் கும்பலின் பார்வயே மாறி போச்சு.” இவங்க எல்லாம் எதுக்கு மாலுக்கு வராங்க?” என்பது போல ஒரு முக மாற்றம். உடைக்கு முக்கியத்துவம் தராத காந்தி பிறந்த இந்தியாவுக்கு வந்த சோதனையைப்  பாருங்க. கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு.

மாலில் நிறைய கடைகள் இருந்தாலும்,  மக்கள் புழங்கும் இடம்ன்னு  பார்த்தா, சினிமா தியேட்டர், உணவகம், மற்றும் மால்கள்ல  இருக்கும் பிரத்யேக விளையாட்டு அரங்கு. இந்த விளையாட்டு அரங்கு, நாம கஷ்டப்பட்டு சம்பாதிச்ச  பணத்தை நிமிஷத்துல கபலீகரம்  செய்யும் ஒரு பெரிய வாய்.

அங்க உள்ள போகும் முன் ஒரு கார்டு  வாங்கணும். அந்த கார்டுல நாம் விளையாடுவதற்கு ஏற்ப பணம் போட  முடியாது.  குறைஞ்சபட்சம் இரண்டாயிரம் ரூபாய் போட்டாதான் இங்க விளையாட முடியும்.

பாக்கி பணம் இருந்தா அடுத்தமுறை வரும் போது  உபயோகிக்கலாம். இது ரொம்ப  சாதுர்யமான விஷயம். உதாரணத்துக்கு ஒரு 500 ரூபாய் மிச்சம் இருக்குன்னு  வெச்சுப்போம். அடுத்த முறை மாலுக்கு வந்து பார்க்கிங் பணம் கட்டி, இங்க இருக்குற கடைகள்ல விண்டோ ஷாப்பிங் செஞ்சு, ஒரு காபி  குடிச்சு, இந்த 500 ரூபாய்க்காக  நாம இன்னும் ஆயிரம் ரூபாய் செலவு செய்யணும்.

அந்த விளையாட்டு அரங்குல தொட்டால் பணம், நின்றால்  பணம். கொரஞ்சபட்சம் அறுபது ரூபாய் இல்லாம அங்க ஒண்ணுமே  விளையாட முடியாது. வீடியோ கேம், வர்ச்சுவல் ரியாலிட்டி, திருவிழாக்களில் உள்ளது போல பொம்மை மீது வளையம்  எறிதல், சின்ன டிரெயின், ராட்டினம் என்று  அங்க சகலமும் இருக்கு. குழந்தைங்க மட்டுமில்லாம, பெரியவங்களும், அந்த இடத்துல “ முழுசா சந்திரமுகியா மாறின கங்காவைப் பார்” டயலாக் ல வரா மாதிரி கண்ணுல  ஒரு  பேராசை, பரபரப்போட முழுசா  வேறு மனிதர்களா மாறி அலைவத கண்கூடாக  பார்க்க முடியும்.

நான் சின்ன வயசுல இருக்கும்போது,   குழந்தைகளுக்கு ஹோட்டல்ல   தோசை வாங்கித்தர கூட பல பெற்றோர்களால  முடியாது. ஆனால், எங்கள் பிள்ளைப் பருவம் ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்போ நம்மகிட்ட பணப்புழக்கம்  இருக்கு, ஆனால், நம் குழந்தைகளுக்கு அதை வச்சு  நல்லது பண்றோமானா? எனக்கு தெரியல.

food court

அங்க ஒரு மணி நேரம் விளையாடிட்டு, “ அம்மா! விளையாடினது போதும், இங்க இருக்கற புக் ஷாப் போலாமா?” ன்னு என் பையன் கேட்டான். சட்டுனு  நான் மாலின் மாயையிலிருந்து விடுபட்டது போல  தோணிச்சு. அந்த மாலுல ஆளே  இல்லாம இருந்த புத்தகக் கடைக்குப்  போனோம்.  பாலைவனத்தின் நடுவில் உள்ள பசுமையான பகுதி ‘Oasis’  போல எங்களுக்கு புத்துணர்ச்சி தந்தது அந்தக்  கடை.

மாலை எங்கள் பர்ஸில் பெரிய பொத்தலுடன்  எங்கள் குடியிருப்புக்கு வந்தபோது, அந்த செடான் காரை மீண்டும் பார்க்கிங்கில் பார்த்தேன். அப்போ அந்த செடான் காரின் உரிமையாளரை “யாரப்பா நீ?  உன்னை பார்க்கணும் போல இருக்கே” ன்னு நெனச்சேன். காரணம், எதையோ தேடி, யாரோடோ ஒப்பிட்டு நாம ஓடிக்கொண்டு  இருக்கும் இந்த நவீன யுகத்துல, பழைய கார், பழைய போன்,  வீட்டுல ரிபேர் செய்த பொருட்களை திரும்ப பயன்படுத்தும் மக்களைப் பார்த்தால் ஆசையாக இருக்கு. ஆச்சரியமாகவும் இருக்கு. இதுபோன்ற மக்கள  தான் நாம முன்மாதிரியா எடுத்துக்க வேண்டுமே தவிர மேற்கத்தியர்களை இல்லை!